சங்ககிரி, டிச. 26: சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவ துணை நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனசட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நபார்டு திட்டத்தின் கீழ் ஒழுகுபாறையில் ரூ. 42.75 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டடம், சிமெண்ட், தார், சாலைகள், கழிவு நீர் வாய்க்கல் மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க புதிய கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்துப் பேசுகையில் மேலும் அவர் கூறியது:
தாட்கோ மூலம் சங்ககிரி ஊராட்சிக்குள்பட்ட கத்தேரி, அன்னதானப்பட்டி ஒழுகுபாறை, திருச்செங்கோடு குமாரமங்கலம், ஊஞ்சனை ஆகிய பகுதிகளில் தலா ரூ. 43 லட்சம் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து அன்னதானப்பட்டி ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவ துணை நிலையம் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இது அமைவதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும்.
சங்ககிரி அருகே உள்ள ஆர்.எஸ். பகுதியில் ஆட்டோ நகரம் அமைப்பதற்காக தேவைப்படும் 52 ஏக்கர் நிலம் வரும் மார்ச் மாதத்திற்குள் கையகப்படுத்தப்படும்.
இதில் ஒட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்படவுள்ளது. ஆட்டோ நகரத்திற்கான மின்சாரத் தேவைக்காக ஐவேலி கிராமத்தில் 110 கிலோவாட் புதிய துணை மின் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது என்றார்.
இந்நிகழ்ச்சியில் அன்னதானபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் விமலிகுட்டி கண்ணுசாமி வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோகிலா மாணிக்கம், பேரூராட்சித் தலைவர் டி.என். அத்தியண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர். வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.