நாமக்கல், டிச.26: பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக சில நாடுகள் முட்டை இறக்குமதி செய்ய தயக்கம் காட்டுவதால் இந்தியாவின் நடப்பாண்டு முட்டை ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு மொத்தம் 952.4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால் கடந்த 11 மாதங்களில் வெறும் 687.9 மில்லியன் முட்டைகளே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முட்டை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள விகேஎஸ் பண்ணையின் நிர்வாக இயக்குநர் சிவக்குமாரிடம் இது குறித்து கேட்டபோது, பறவைக் காய்ச்சல் நோய் பரவியபோது இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய பல நாடுகள் தடை விதித்தன. கடந்த ஜூன் மாதம் இந்நோயில் இருந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்தியா அறிவிக்கப்பட்ட போதிலும், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், குவைத் ஈராக் ஆகியவை இன்னும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நீட்டித்து வருகின்றன.
இதனால் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது.
அதேபோல் முட்டை விலை உயர்ந்துள்ளதாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
குறைந்த விலைக்கு அந்த நாட்டு விவசாயிகளே முட்டைகளை உற்பத்தி செய்வதால் அவை இறக்குமதியில் இப்போது அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இல்லை என்பதை சர்வதேச விலங்குகள்
நல நிறுவனம் அங்கீகரிக்காததால்தான் சில நாடுகள் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய தயக்கம் காட்டுகின்றன.
நோய் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த அமைப்புகளிடம் எடுத்துக் கூறி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோழிப் பண்ணை உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு.