நாமக்கல், ஜன.29: மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.
மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற தர்னாவுக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் பாலமுரளி தலைமை வகித்தார். துணைச் செயலர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2006-ம் தேதி வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் சம்பள வேறுபாட்டைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசைப் போல் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக உயர்த்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, போக்குவரத்துப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றோருக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.