தருமபுரி, ஜன. 29: மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.நா. பிரகடனத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப ஏதுவான பணிகளை அரசின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தி பணியமர்த்த வேண்டும் என்கிற ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.
வேலையில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். இலவச மனைப்பட்டா, வீடு கட்டித்தர வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அந்தியோதயா குடும்ப அட்டையும், இதர சலுகைகளும் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒருநாள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாற்றுத் திறனாளிகள் குறித்து சரியான கணக்கீட்டை எடுக்க வேண்டும். இதன்படி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் பஸ்களிலும் 75 சதவீத கட்டணச் சலுகை வழங்க வேண்டும். வட்டந்தோறும் ஒரு பொதுப்பள்ளியில் சிறப்பு வசதிகளுடன் தனித்தனி வகுப்பறை உருவாக்க வேண்டும். வாய்பேசாத, காதுகேளாதோருக்கான உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு சங்க மாவட்டப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் எஸ். நம்புராஜன் சிறப்புரையாற்றினார். அரூர் எம்எல்ஏ பி. டில்லிபாபு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாவட்டச் செயலாளர் எம். ராஜ்குமார், துணைத் தலைவர் சி. அபர்ணா, துணைச் செயலாளர் எஸ். சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.