எடப்பாடி, ஜூலை 3: நோய்களைத் தீர்க்கும் அருமருந்து என்று கூறி எடப்பாடி, சங்ககிரி பகுதிகளில் ஒரு லிட்டர் கழுதைப் பால் ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. கழுதைப் பால் மருத்துவ ரீதியாக மனிதனுக்கு உகந்தது இல்லை என்று அலோபதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எடப்பாடியில் தங்கி கிராமப் பகுதிகளில் கழுதைப் பால் விற்று வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் தினசரி ஒவ்வொரு கிராமமாகச் செல்லும் இவர்கள், சங்கு (சங்கடை) மற்றும் லிட்டர் அளவுகளில் 50 மில்லி, 100 மில்லி அளவுகளில் கழுதைப் பால் விற்கின்றனர்.
ஒரு சங்கடை அளவு ரூ.20-க்கும், 50 மில்லி ரூ.60-க்கும், 100 மில்லி ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து கழுதைப் பால் வியாபாரம் செய்யும் விருத்தாசலத்தைச் சேர்ந்த தங்கராஜ் கூறியது:
எங்கள் தொழிலே கழுதைப் பால் விற்பதுதான். ஒவ்வொரு கழுதையும் குட்டி போட்டதில் இருந்து 5 மாதங்கள் வரை பால் கொடுக்கும். ஒரு கழுதை நாளொன்றுக்கு அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை பால் கொடுக்கும். ஒவ்வொரு ஊரிலும் 10 நாள்கள் வரை தங்கி வியாபாரம் செய்வோம்.
கழுதைப் பால் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், இருமல், சளி குணமாகும். நோய்களை குணப்படுத்தும் கழுதைப் பால் பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை என்றார் அவர்.
மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை
இதுகுறித்து எடப்பாடியைச் சேர்ந்த அலோபதி மருத்துவர்களிடம் கேட்டபோது, கழுதைப் பால் மனிதனுக்கு எந்த வகையிலும் உகந்தது இல்லை. கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது என்று மருத்துவ ரீதியாக இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்றனர்.
தோல் நோய்கள் குணமாகும்: இருப்பினும், கழுதைப் பால் குடித்தால் தோல் நோய்களான தடிப்பு, சொறி, கரப்பான், வாதநோய், மயக்கம் போன்றவை குணமடையும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.