நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் நகரில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை வெப்பம் முடிவுக்கு வந்து, தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகியும் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை போதிய மழை பதிவாகவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நகரில் கனமழை கொட்டியது. மதிய வேளையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், மாலை நேரத்தில் வெப்பநிலை குறைந்து, சூறைக்காற்று வீசத் தொடங்கியது. நேரமாக, ஆக காற்றின் வேகம் அதிகரித்து, கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் நகரின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்பட்டது.
மழையால் ஆங்காங்கே சாக்கடைகள் நிரம்பியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு சென்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாயினர். பருவக் காற்றால் பெய்யும் முதல் மழை என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.