நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த இளவயது திருமணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நாமக்கல் கொசுவம்பட்டியில் 15 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அழகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. குமரகுருபரனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், வட்டாட்சியர் திருஞானம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு சனிக்கிழமை இரவு சென்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 15 வயதே ஆனதை உறுதி செய்த அதிகாரிகள், 18 வயதுக்கு முன்பாக பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எடுத்துக் கூறினர்.
திருமணத்தை நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, திருமணத்தை நிறுத்தி வைப்பதாக மணமக்களின் பெற்றோர் தெரிவித்தனர். அது தொடர்பான எழுத்துப் பூர்வமான உறுதிமொழியையும் அதிகாரிகளிடம் அளித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கிராமப்புறங்களில்தான் இளவயது திருமணங்கள் நடந்து வந்தன. இப்போது நகர்ப்புறங்களிலும் நடக்கத் தொடங்கி விட்டதை இச்சம்பவத்தில் இருந்து உணர முடிகிறது.
இளவயது திருமணங்கள் குறித்து தெரியவந்தால், வருவாய்த் துறையினருக்கும், போலீஸôருக்கும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றனர்.