திருச்செங்கோடு, ஜூலை 3: திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தில் பள்ளிக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் திருச்செங்கோடு நகரக்குழுக் கூட்டம் நிர்வாகி சுப்ரமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பொறுப்பு செயலர் ஜெயராமன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலர் எஸ். மணிவேல் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சீத்தாராம்பாளையத்தில் பள்ளிக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிக்க அப்பகுதியில் இருந்து அக்கடையை வேறு இடத்திறகு மாற்ற வேண்டும்.
நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால், போக்குவரத்துக் காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்க, உடனடியாக போக்குவரத்துக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், தொழிற்சாலைகளில் இரவுப் பணியாற்றும் தொழிலாளர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதை காவல்து றையினர் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.