சேலம், ஜூலை 3: சேலம் இரும்பாலை அருகே ஞாயிற்றுக்கிழமை பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி தண்டபாணி (43) உயிரிழந்தார்.
கே.ஆர்.தோப்பூர், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் தண்டபாணி. விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை தாரமங்கலத்தில் இருந்து சேலம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். கணபதிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பலத்த மழை காரணமாக சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர், சாலையின் வலதுபுறத்துக்குச் சென்றார். அப்போது சேலத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி மற்றொரு பைக்கில் வந்த கோழிக்காட்டானூரைச் சேர்ந்த தங்கவேலுவும் (27) தண்டபாணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த தண்டபாணி, அதே இடத்தில் உயிரிழந்தார். தங்கவேலு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.