சேலம், ஜூலை 3: சேலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் தலைவர் தாமோதிரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திலகம் முன்னிலை வகித்தார். கடந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 478 மதிப்பெண்கள் எடுத்த இப்பள்ளி மாணவி கே.தேன்மொழி, 458 மதிப்பெண்கள் எடுத்த எஸ்.சங்கீதா, 455 மதிப்பெண்கள் எடுத்த டி.அஜீத் பிரவீண் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மக்கள் மன்றம் அமைப்பின் துணைத் தலைவர்கள் சண்முகம், மோகன், செயலர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.