தம்மம்பட்டி, ஜூலை 9: கெங்கவல்லி அருகே இளம்வயது பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த திருமணத்தை, அதிகாரிகள் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
கெங்கவல்லி அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் வரதராஜீ மகள் கனிமொழி. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகன் கணேஷ்சங்கர்.
இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தாண்டராம்பட்டில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், கனிமொழிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் 20 நாள்கள் உள்ளதாகவும், இளம் வயது பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வராஜிடம் வெள்ளிக்கிழமை இரவு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோட்டாட்சியர் செல்வராஜ் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை சாத்தப்பாடிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் கனிமொழிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது உறுதியானது. எனவே, திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.