திருச்செங்கோடு, ஜூலை 9: குடும்ப அட்டையில் சமையல் எரிவாயு இணைப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் பதிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்
திருச்செங்கோடு வருவாய் வட்டத்தில் சுமார் 1.75 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் 1.05 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. திருச்செங்கோட்டில் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் ஒரு பகுதி வினியோகம் தனியாரால் நடத்தப்படுகிறது. சமையல் எரிவாயு இணைப்பு தரும்போது எத்தனை சிலிண்டர் உள்ளது என்பதை பதிவு செய்து கொடுக்கப்படுகிறது. மீதியுள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் தரப்படுகிறது. ÷இதன்படி 70 ஆயிரம் அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் தரப்பட வேண்டும். ஆனால் நியாயவிலைக் கடை பணியாளர்கள் அதிக அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் கேட்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு தந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் அளவை மிகவும் குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் தேவைப்படுவோரின் உண்மையான விவரத்தை அரசு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் சென்று பதிவு செய்யு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வேலைகளை விட்டுவிட்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது என்று குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.