சேலம், ஜூலை 9: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு எதிராக, தொடர்ந்து அவதூறாக பேசி வரும் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.டி.பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தமிழக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று யுவராஜா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். கட்சியின் உள் விவகாரங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று கட்சித் தலைமை ஏற்கெனவே கூறியிருந்தும், அதற்கு எதிராக யுவராஜா செயல்படுகிறார்.
ராஜீவ் காந்தி, மூப்பனார் உள்ளிட்டத் தலைவர்களுடன் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த மூத்த தலைவரான கே.வீ.தங்கபாலுவை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டிக்கத்தக்கது என்றனர்.