நாமக்கல், ஜூலை 9: நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த பாசிப் பயிறு ஏலத்தில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கும், வேளாண் துறை அதிகாரிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஏலம் பல மணிநேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், நாமக்கல் மிகவும் வறட்சியான மாவட்டம். இந்த மாவட்டத்தில் பெய்ய கூடிய மழை அளவு மிகவும் குறைவு. இத்தகைய சீதோஷ்ணநிலைக்கு நன்கு வளரக் கூடிய பாசிப் பயிறு சாகுபடி பெருமளவு நிலப்பரப்பில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் விதத்தில் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மைத் துறையின் ஒருங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பாசி பயிறு ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 5 டன் பாசிப் பயிறு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 2 டன் அளவிற்கு பாசிப் பயிறு விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், பாசிப் பயிறுக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இந்தப் பிரச்னை குறித்து விவசாயிகள் கூறியது:
ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தை விலையைவிட கூடுதலான விலை பாசிப் பயிறுக்கு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கூடுதல் விலையை கொடுக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். வெளிசந்தையில் பாசிப் பயிறு ஒரு கிலோ ரூ.43.5 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையவிட ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாயை அதிகமாகத் தரக் கோருகிறோம். ஆனால் அதற்கு அதிகாரிகளும், வியாபாரிகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதே நிலை தொடரும்பட்சத்தில் ஏலத்தை புறக்கணிப்பை தவிர வேறு வழியில்லை, என்றனர்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் சந்தை விலையை கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால் சந்தைவிலையைவிட அதிக விலை கேட்டால் வியாபாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, விவசாயிகள் சந்தை விலைக்கு பாசிப் பயிறை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
இருதரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வராததால் ஏலம் நடத்திவதில் காலதாமதம் ஏற்பட்டது.