கிருஷ்ணகிரி, ஜூலை 9: கிருஷ்ணகிரியில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.முனுசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.
அப்பகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறியபோது, அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார். மேலும், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கட்டிகானப்பள்ளி, கீழ்புதூர், மேல்புதூர், எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் நகர், அகசிப்பள்ளி, தேவசமுத்திரம் ஆகிய பகுதி வாக்காளர்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கடப்பன், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள், குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் தங்கவேலு உள்பட பலர் உடனிருந்தனர்.