சேலம், ஜூலை 9: சேலம் தெற்கு ரோட்டரி சங்கம், ஜெயம் பொறியியல் கல்லூரி, யுட்டிலிட்டி போராம் அமைப்புகள் சார்பில் சேலத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
சேலம், அழகாபுரம், ஜெயின்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியை பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
அனைத்து வயதினரும் பங்கேற்கும் விதமாக, 9 சுற்றுகளாக லீக் முறையில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நிறைவு பெறுகிறது. இதில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
விழாவில், சேலம் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.சுந்தரலிங்கம், ஜெயம் பொறியியல் கல்லூரித் தலைவர் எம்.ரமேஷ், ஜெயின்ட் ஜான் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.