ராசிபுரம், ஜூலை 9: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ராசிபுரம் நகரில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் மாநிலச் செயலர் க. சிதம்பரம் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை நேரங்களிலும், மழைக்காலங்களிலும் நெரிசல் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையைத் தவிர்க்க இப்போதுள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றம் செய்து, புறநகரில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.