திருச்செங்கோடு, ஜூலை 9: விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் ஆன் லைன் பயிலரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இசிஇ துறை சார்பில் நடைபெறும் இப்பயிலரங்கை மும்பை ஐஐடி மற்றும் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தென்னிந்தியாவில் முதன் முறையாக இந்த கல்லூரியில்தான் இந்தப்பயிலரங்கு நடப்பது குறிப்பிடத்தக்கது. பயிலரங்கு தொடக்க விழாவில் அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி வைத்தார். தாளாளர் மு. கருணாநிதி தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஆர்.கே. ஞானமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 81 பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கு 15 நாட்கள் நடைபெறும்.
மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் மதுமிதா கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினார். நிர்வாக அலுவலர் சொக்கலிங்கம், சேர்க்கை அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.