அரூர், ஜூலை 14: டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் கச்சேரிமேடு பஸ் நிறுத்தம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் கே.பிரபாகரன் தலைமை வகித்தார். மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாக விலைவாசி நாட்டில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு காரணமாக நாள்தோறும் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மத்திய அரசு அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாஜக கோட்ட பொறுப்பாளர் சுதிர்முருகன், மாவட்ட மூத்த நிர்வாகி டி.ஜி.ரங்கராஜன், மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.ஏ.வி. வேடியப்பன், ஒன்றியத் தலைவர் கோ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.