பெங்களூர் பன்னரகட்டா முக்கிய சாலையில் உள்ள கொட்டிகெரேவைச் சேர்ந்தவர் வினய்குமார். அலங்காரப் பொருள் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜாஸ்ரீ (26). இவர்களுக்கு மகன் குஷால் (3).
இந்நிலையில், சனிக்கிழமை காலை ஹுலிமாவு போலீஸ் நிலையத்திற்குச் சென்ற வினய்குமார் தனது மனைவி வனஜாஸ்ரீயை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். இதையடுத்து அவரது வீட்டிற்குச் சென்று போலீஸôர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வனஜாஸ்ரீயின் தந்தை வினய்குமார் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி புகார் அளித்தாராம்.
இது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தியபோது, வினய்குமார் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம். வனஜாஸ்ரீ ஆபரணங்கள் செய்து தருமாறு தன்னைத் தொந்தரவு செய்ததால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்து, சடலத்தை ஆந்திர மாநில எல்லைப்பகுதியான புங்கனூரில் ஆஸிட் ஊற்றி எரித்ததாகக் கூறினாராம். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வினய்குமாரை கைது செய்த போலீஸôர், சடலத்தை மீட்க புங்கனூர் சென்றுள்ளனர்.