சேலம், ஜூலை 30: நிலப் பறிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 466 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகரான பாலமோகன்ராஜை (64) மிரட்டி நிலம் பறித்ததாக வீரபாண்டி ஆறுமுகத்தை டவுன் குற்றப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை காலை கைது செய்தனர். இத் óதகவல் பரவியதும் காலை 8 மணி முதல் சேலம் மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் பையூரான் கொட்டாய் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த டவுன் பஸ் ஆட்சியர் அலுவலகம் எதிரே நின்றது. அதில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசித் தாக்கினர்.
இதில் கண்ணாடி நொறுங்கியது. டிரைவர் கர்ச்சியப்பன், முன் இருக்கையில் அமர்ந்திருந்த சில பெண்கள் கண்ணாடி குத்தியதில் காயம் அடைந்தனர்.
இதேபோல் தொளசம்பட்டியில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ், பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி நோக்கிச் சென்ற பஸ் மீதும் மர்ம கும்பல் கற்களை வீசித் தாக்கியது.
இதில் டிரைவர்கள் செல்வகுமார், ராஜாகுமார், பயணிகள் புஷ்பா, அனிதா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதேபோல் மாநகரம் முழுவதும் நண்பகல் வரை 12 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
இதில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களும் அடங்கும். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள், வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
சேலம் அம்மாப்பேட்டை பகுதியிலும், டவுன் போலீஸ் நிலையம் எதிரிலும் மறியலில் ஈடுபட முயன்ற திமுகவினர், போலீஸôரின் கைது நடவடிக்கைக்கு பயந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகில் தம்மம்பட்டி நகர திமுக செயலர் ராஜா, ஏற்காடு பஸ் நிலையத்தில் திமுக ஒன்றியச் செயலர் பாலு, ஏற்காடு ஊராட்சி கவுன்சிலர் ஈஸ்வரன், மேட்டூரில் நகரச் செயலர் கோ.காசி விஸ்வநாதன், நகர் மன்றத் தலைவர் சாந்தி, மேச்சேரியில் ஒன்றியச் செயலர் காசி விஸ்வநாதன், கொளத்தூரில் ஒன்றியச் செயலர் மணி, ஓமலூர் பஸ் நிலையம் பகுதியில் திமுக ஒன்றியச் செயலர் பெரமன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சங்ககிரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக ஒன்றியச் செயலர் என்.ஆர்.எஸ்.ராமசாமி, நகரச் செயலர் கந்தசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை சங்ககிரி போலீஸôர் தேடி வருகின்றனர்.