தருமபுரி, பிப்.10: காரிமங்கலம் அரசு மருத்துவமனையின் சேவைகள் தொடர்பாக நோயாளிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், 95.2 சதவீதம் பேர் திருப்தியளிப்பதாக வாக்களித்துள்ளனர்.
÷தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவமனைக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குகள் சேகரிக்கப்பட்டன.
தேசிய ஊரக சுகாதார இயக்கம் சார்பில், ஆர்டிஎஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்களித்தவர்களிடம் வாக்குச் சீட்டு அளித்து சேவையில் திருப்தி இருந்தால் பச்சை வண்ணத்திலும், குறைபாடு இருந்தால் சிவப்பு வண்ணத்திலும் வாக்களிக்க கூறப்பட்டது. மொத்தம் 106 வாக்குகள் பதிவாயின. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவை திருப்தியாக இருப்பதாக 101 பச்சை வண்ணச் சீட்டுகள் இருந்தன. 5 சீட்டுகள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன.
கடந்தாண்டு இதே மருத்துவமனையில் நடந்த வாக்கெடுப்பில் 75 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி என வாக்களித்திருந்தனர். இப்போது மருத்துவ சேவைகள் முழுமையாக கிடைப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவர் சுசித்ரா, தேசிய ஊரக சுகாதார இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். கமலக்கண்ணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர். தர்மலிங்கம் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவமனையின் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.