குமாரபாளையம், பிப். 10: தமிழகத்தில் நிலவி வரும் 10 மணி நேர மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், பஸ் நிலையக் கடைகள், தினசரி மார்கெட் சுங்க வசூலிக்கும் உரிமை வழங்கும் ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ராஜேந்திரன், மேலாளர் கமால் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், திமுக உறுப்பினர் ஜி.எஸ்.ஞானசேகரன் பேசுகையில், தமிழகமெங்கும் தினசரி 10 மணி நேரத்திற்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. தொழில் முனைவோர், கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர் கே.எஸ்.எம்.எம்.பாலசுப்பிரமணி (அதிமுக) : திமுக ஆட்சியில் 2 மணி நேர மின்தடையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது நிலவிய பிரச்னைகள் சரி செய்யப்படாததால் தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானசேகரன் (திமுக): ஆட்சிக்கு வந்தால் 2 மாதத்தில் மின் தடையை நீக்கப்படும் எனக் கூறிவிட்டு, 2 மணி நேரம் இருந்த மின் தடையை அதிமுக அரசு 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது. விசைத்தறித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினர்.