நாமக்கல், பிப். 10: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்தார்.
முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, தோல்நோய், சிறுநீரக மருத்துவம், நரம்பியல், மூட்டு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் முகாமில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட முகாமில் காசநோய், சித்த மருத்துவம், சுகாதாரம் நலவாழ்வு, குடும்ப நலம், பெண் சிசுகொலை தொழுநோய், மனநலம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ந.ராஜா, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.