Enable Javscript for better performance
தமிழகத்தில் ஆயிரம் பள்ளி வாகனங்கள் முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி வாகனங்களுக்கு தேவையின்றி விதிக்கப்படும் கெடுபிடிகளால் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

    குழுவின் சார்பில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களுக்கு மாநிலப் பொதுச் செயலர் கே.ஆர். நந்தகுமார், மாநிலச் செயலர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை வகித்தனர்.

    ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வே.சந்திரசேகரன் பேசியது:

    பள்ளி வாகனங்களை இயக்குவது தொடர்பாக அரசு 11 விதிமுறைகளை வகுத்துள்ளது. இதில் பல விதிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. எனவே, அந்த விதிகளை மாற்றம் செய்திட வேண்டும். அதுவரை, இந்த புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, பேருந்து உதவியாளர்கள் நடத்துநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பேருந்து படிக்கட்டு உயரம் 300 மி.மீ. ஆக இருக்க வேண்டும். மாணவர்களின் இருக்கைளுக்கு கீழே கிரில் அமைத்து வைத்து

    புத்தகப் பைகளை வைக்க வேண்டும். பேருந்தில் பெரிய அளவிலானஅவசர வழி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் ஏற்புடையதாக இல்லை.

    அவசர வழிக் கதவு பெரிதாக உள்ளதால், பேருந்தின் பாடி உறுதியாக இருக்காது. மேலும், அவசர வழிக் கதவு எதிர்பாராத விதமாக திடீரெனத் திறந்தால் குழந்தைகள் கீழே விழுந்து விடுவர்.

    ஏற்கெனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுதோறும் தகுதி உரிமம் (எஃப்சி) பெறுவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. இப்போது புதிய விதிமுறைகளால் ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த விதிமுறைகளைத் தளர்த்தக் கோரி, வரும் 19-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பள்ளிப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்த உள்ளோம். எனவே, அன்று ஒரு நாள் மட்டும் பேருந்தில் வரும் மாணவர்களை பெற்றோர்களே அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 173 பள்ளிகளில் 700 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் வரும் 19-ம் தேதி நிறுத்தப்படவுள்ளன.

    இந்தக் கூட்டங்களில், சங்கப் பிரதிநிதிகள் கொங்கரசன், சந்திரசேகரன், சக்திவேல், சுதாகரன், ஸ்ரீதரன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai