Enable Javscript for better performance
வட்டார வளர்ச்சி அலுவலகப் பெண் ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பெண் ஊழியர் எஸ்.அன்னபூரணி ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

    தருமபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி எஸ்.அன்னபூரணி (34). இவர் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொறியியல் பிரிவில் பணி மேற்பார்வையாளராக (ஓவர்சீஸ்) உள்ளார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி அருகேயுள்ள பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளைக்கவுண்டர் மகன் பழனி (49). இவர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவசத் தொகுப்பு வீடு பெற்றார்.

    வீட்டின் கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன் நிறைவடைந்து விட்டதாம். தொகுப்பு வீட்டுக்கான தொகையில் ரூ.7,500 வர வேண்டி இருந்ததாம்.

    இந்த நிலையில், விவசாயி பழனி, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பொறியியல் பிரிவு பணி மேற்பார்வையாளர் எஸ்.அன்னபூரணியிடம் இலவசத் தொகுப்பு வீட்டுக்கான நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு பரிந்துரை வழங்குமாறு கூறினாராம். இதற்கு அவர், ரூ.2,000 கொடுக்கும்படி கேட்டுக் கட்டாயப்படுத்தினாராம்.

    இதுகுறித்து தருமபுரியில் உள்ள மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் பழனி புகார் தெரிவித்தார். டிஎஸ்பி எஸ்.ஞானவேல் அறிவுரையின்படி, காவல் ஆய்வாளர் ஜி.வி.கிருஷ்ண ராஜன், காவல் உதவி ஆய்வாளர்கள் குலோத்துங்கன், ஜி.விஜயகுமார் மற்றும் போலீஸார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் மறைந்திருந்தனர்.

    மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணி மேற்பார்வையாளர் எஸ்.அன்னபூரணியிடம் பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை பழனி வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார், பெண் ஊழியர் எஸ்.அன்னபூரணியை கைது செய்தனர். அவர் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai