Enable Javscript for better performance
விவசாய நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: பயிர்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாய நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: பயிர்கள் சேதம்

    By dn  |   Published on : 06th November 2012 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நெருப்பூர் அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், தருமபுரி மாவட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை அழித்து நாசம் செய்தன. வனத் துறையினர் போராடி, யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பென்னாகரம் வனப் பகுதியிலிருந்து அடிக்கடி வெளியேறும் யானைகள் நெருப்பூர் பகுதியில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகாமல் இருக்க வனத் துறையின் சார்பில் மின்சார வேலி மற்றும் அகழிகள் வெட்டப்பட்டன.

    பென்னாகரம் அருகே பெல்லூரிலிருந்து கரடி குண்டு வரை 2 கி.மீ. தொலைவுக்கு அகழி (யானைக் குழி) வனத் துறையினரால் வெட்டப்பட்டன.

    இதனால், இந்தக் கிராமங்களில் யானைகள் புகுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நெருப்பூர் அருகே உள்ள ஏமனூர் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், அகழி வெட்டப்படாத கரடி குண்டிலிருந்து ஒட்டனூர் இடைப்பட்ட பகுதி வழியாகப் புகுந்து அந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், ராகி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில், நெருப்பூர் கிராமம் அருகே 2 குட்டிகளுடன் புகுந்த 6 யானைகள் அடங்கிய கூட்டம், விவசாயிகள் மாரியப்பன் (45), திருமலை (30) ஆகியோரின் தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து, சோளப் பயிர்களை நாசம் செய்தன.

    கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் நடமாடும் யானைக் கூட்டத்தால் ரூ.5 லட்சம் மதிப்பிலான வேளாண் பயிர்கள் நாசமானதாகவும், இதுகுறித்து வனத் துறை, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    ஊருக்குள் புகும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும், யானைகள் மீண்டும் ஊருக்குள் புகாமல் இருக்க கரடி குண்டிலிருந்து ஒட்டனூர் வரை அகழியை வெட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai