Enable Javscript for better performance
தற்கொலைச் சம்பவம்: எஸ்.ஐ. உள்பட 7 பேரை விசாரிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலைச் சம்பவம்: எஸ்.ஐ. உள்பட 7 பேரை விசாரிக்க உத்தரவு

    By  தருமபுரி  |   Published on : 09th November 2012 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அருகே உள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜை (45) தற்கொலைக்குத் தூண்டியதாக கிருஷ்ணாபுரம் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை விசாரணை செய்யக் கோரி, நாகராஜின் மனைவி தேன்மொழி (42) வியாழக்கிழமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
     தேன்மொழி அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
     தருமபுரி அருகே உள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று என்னுடைய மகள் கல்லூரிக்குச் சென்றபோது நத்தம் காலனியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் கடத்திச் சென்றார்.
     இதுகுறித்து என்னுடைய கணவர் நாகராஜ், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பலமுறை வாய்மூலமாகப் புகார் தெரிவித்தும், எனது மகளை கண்டுபிடிக்கவில்லை. கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், எனது மகளைக் கடத்திச் சென்ற இளைஞருக்கு உறவினர் என்பதால், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வழக்கு பதிவு செய்யாமல் இருந்தார்.
     இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று புகார் மனு அளிக்க நானும், கணவர் நாகராஜும் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்கு சென்றோம். அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ, இளவரசன், பொடா பழனிசாமி, தருமபுரியைச் சேர்ந்த குண்டுசக்தி, மாரவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் பொ.மு.நந்தன் ஆகிய 7 பேரும் காவல் நிலையத்தில் இருந்தனர்.
     அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்ட 7 பேரும் எங்களை மிரட்டி அவமானப்படுத்தினார்கள். இதனால், என் கணவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, எனது கணவர் தற்கொலைக்கு காரணமான 7 பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தேன்மொழி குறிப்பிட்டுள்ளார்.
     இதை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜோதி, புகார் மனுவை விசாரிக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், நாகராஜை தற்கொலைக்குத் தூண்டியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் பொ.மு.நந்தன், மாரவாடி ராஜா உள்ளிட்ட சிலர் மீது கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
     நாகராஜ் தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவியதால் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai