Enable Javscript for better performance
பாமக, காவல் துறை மீது மார்க்சிஸ்ட் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே நாயக்கன்கொட்டாயில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி, காவல் துறை மீது மார்க்சிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தூதுக் குழு அமைக்கப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

    சென்னை மாமல்லபுரம், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாமக கூட்டங்களில் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியான காடுவெட்டி குரு பேசும்போது, தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண், ஆண்களை காதல் திருமணம் செய்யும் நபர்களை நடமாடவிடக் கூடாது என பேசியுள்ளார்.

    தொடர்ந்து இதுபோல அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசி வருவது வன்முறைக்கு வித்திடும் வகையில் உள்ளது.

    இப்போது, நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவமும் அதன் வெளிப்பாடாகவே கருதுகிறோம்.

    இந்தச் சம்பவம் திடீரென ஏற்பட்ட கோபத்தால் நடைபெறவில்லை. திட்டமிட்டு பயிற்சி எடுத்து நடத்தியுள்ளனர். ஏனெனில், ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    பிற்பகலில் சம்பவம் நடைபெற்றும் காவல் துறை வேடிக்கை பார்த்துதான் உள்ளது.

    நள்ளிரவுக்கு மேலேயே கிராமத்துக்கு சென்றுள்ளனர். அதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. மாவட்ட ஆட்சியரும் மறுநாள் காலையில்தான் சம்பவப் பகுதியைப் பார்வையிட்டுள்ளார்.

    சம்பவம் நடைபெற்ற கிராமத்துக்கு அருகில்தான் கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் உள்ளது. மேலும், ஒரு மாதமாகவே இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்தது போலீஸôருக்கு தெரியும். இதுதொடர்பாக, விரிவான விசாரணை நடத்தி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai