Enable Javscript for better performance
சிபிஐ விசாரிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாட்டை தீவிரப்படுத்தியவர் பெண் வழக்குரைஞர்
     எஸ். செங்கொடி.
     தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்குள்பட்ட பொய்யப்பட்டியைச் சேர்ந்தவர். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி எடுத்து வருகிறார். மனித உரிமை வழக்குரைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
     தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
     வன்முறைச் சம்பவம் தொடர்பாக தொலைபேசியில் தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டோம். அவர், தென் மாவட்ட பாதுகாப்புக்கு சென்றிருப்பதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை அனுப்பியதாகவும் கூறினார்.
     மறுநாள் சம்பவத்தின் கோரத் தாண்டவம் நாளிதழ்களில் வெளியானது. இதையடுத்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், நீதியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன்.
     எனது மனுவை ஏற்று, முதல் கட்டமாக பாதிக்க்கப்பட்ட வீடுகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சம்பவம் தொடர்பாக டிஐஜி தலைமையில் தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
     இப்போது, சிபிசிஐடி போலீஸôர் விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். டிஐஜி விசாரணையாக இருந்தாலும், சிபிசிஐடி விசாரணையாக இருந்தாலும் இரண்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.
     சிபிஐ விசாரணை கோரியே மனு தாக்கல் செய்துள்ளோம். 3 வாரங்களுக்குள் அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து நீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பிக்கும்.
     ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே ரூ.3 லட்சம் மதிப்பில் இருக்கும். ஆனால், அரசு ரூ.50 ஆயிரம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது.
     இது போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அனைவருமே புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். எனவே, புதிய வீடுகளை கட்டித் தந்து அனைத்துப் பொருள்களையும் வழங்க வேண்டும்.
     தருமபுரி மாவட்டக் காவல் துறை சிலரைக் கைது செய்து, வன்கொடுமைச் சட்டம் உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
     ஆனால், காவல் துறை சம்பவத்தை முழுமையாக உணரவில்லை. ஒவ்வொரு வீடாகச் சென்று பீரோவை உடைத்து அங்கிருந்தவர்களை மிரட்டி கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டனர். கூட்டுக் கொள்ளை தொடர்பாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை.
     சம்பவத்தின் போது புதிதாகக் கட்டப்பட்ட கான்கிரீட் வீட்டுக்குள் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த குழந்தைகள், பெண்கள் 40 பேர் இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் காயமடைந்த குழந்தைகளும் உள்ளனர்.
     இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்று கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசியதற்காக வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆயுதங்களுடன் வந்தே தாக்குதலை நடத்தியுள்ளது வன்முறைக் கும்பல். ஆனால், ஆயுதங்கள் வைத்திருந்ததாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. சிபிஐ விசாரணை மட்டுமே இதற்கு முழுமையான தீர்வை அளிக்கும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai