Enable Javscript for better performance
தீயில் நாசமான பொருள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்தில் கொண்டம்பட்டி கிராமத்தில் தீயில் சேதமடைந்த பொருள்களை தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் போலீஸார் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

    தருமபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கலப்புத் திருமணம் தொடர்பாக இருவேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 7-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இதில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகியப் பகுதிகளில் வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை பெட்ரோல் குண்டுகள் வீசி தீக்கிரையாக்கினர்.

    இந்த நிலையில், கொண்டம்பட்டி கிராமத்தில் 24 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தில் சேதமடைந்த சீமை ஓடுகள், இரு சக்கர வாகனம், ஓலைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸார் சேகரித்தனர்.

    இந்தப் பொருள்கள் மற்றும் வன்முறை தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஆகியவற்றை அரூர் டிஎஸ்பி வி.சம்பத் தலைமையிலான போலீஸார் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    ஜாமீன் மனு தாக்கல்:

    நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் 12 மாணவர்கள் உள்ளிட்ட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 136 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கும்படி தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai