Enable Javscript for better performance
136 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 136 பேர் ஜாமீன் மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    தருமபுரியை அடுத்துள்ள நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இருவர் கலப்புத் திருமணம் செய்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 7-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒரு சமூகத்தினரின் வீடுகள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    இதுதொடர்பாக 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், 12 மாணவர்கள் உள்ளிட்ட 136 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிசிஐடி போலீஸ் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வணங்காமுடி, அனைத்து ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai