திமுக உயர்நிலைக் குழுவின் விசாரணை தொடங்கியது
By dn | Published on : 22nd November 2012 01:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக திமுக உயர்நிலைக் குழுவினர் புதன்கிழமை தங்களது விசாரணையைத் தொடங்கினர்.
தருமபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையால் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க திமுக சார்பில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.ஜி.சுகவனம், மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் மா.உமாபதி ஆகியோர் உள்ளனர்.
இந்தக் குழுவினர், தருமபுரிக்கு புதன்கிழமை வந்தனர். இவர்களுக்கு கட்சியின் தருமபுரி மாவட்டப் பொறுப்பாளர்கள் பி.என்.பி. இன்பசேகரன் (வடக்கு), வ. முல்லைவேந்தன் (தெற்கு) ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அனைவரும் ஒன்றாகச் சென்று பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டனர்.
முதல் கட்டமாக நத்தம் காலனியில் முகாமிட்டு, அங்குள்ள வீடுகளைப் பார்வையிட்டனர். காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் வீடு முழுவதுமாக தாக்குதலுக்குள்ளாகியிருப்பதையும், அவர்களது உறவினர்களது வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதையும் பார்வையிட்டனர்.
பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களிடம் சம்பவம் குறித்து தனித் தனியே விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பெ.வீ. கல்யாணசுந்தரம் கூறியது:
திமுக தலைவர் கருணாநிதி உத்தரவுப்படி ஆய்வைத் தொடக்கியுள்ளோம். தாக்குதலில் 3 கிராம மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கருகிய பொருள்களையும், சேதமடைந்த பொருள்களையும் பார்த்தாலே உணர முடியும். பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் வளர்த்தெடுத்த சாதி மறுப்பு, கலப்புத் திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை வேடிக்கை பார்க்க முடியாது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை கருணாநிதியிடம் வழங்கவுள்ளோம். நிவாரணம் குறித்து அவரே அறிவிப்பார். இந்தச் சம்பவத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது.
போதிய அடிப்படை வசதிகள்கூட செய்து தராத நிலையே உள்ளது. சிபி-சிஐடி விசாரணையாக இருந்தாலும், உள்ளூர் போலீஸாக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார் அவர்.
சாதிய வன்முறைகளுக்கு திராவிடக் கட்சியின் பெரிய தலைவர் ஒருவரே காரணம் என்ற ராமதாஸின் கருத்துக்கு விளக்கம் கேட்டதற்கு, யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்த நாங்கள் வரவில்லை. இங்குள்ள உண்மையான நிலவரம் குறித்து அறிக்கை தயாரித்து கட்சியின் தலைமையிடம் வழங்குவோம் என்றார் அவர். இந்தக் குழுவின் விசாரணை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.