Enable Javscript for better performance
கைக் குழந்தைகளுடன் தவிக்கும் பெண்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி வன்முறைச் சம்பவத்தில் தொடர்பில்லாத தனது கணவரை போலீஸார் கைது செய்துள்ளதால், கைக் குழந்தைகளுடன் தனியே பரிதவிப்பதாக முனியம்மாள் (25) கூறினார்.

    தருமபுரியை அடுத்த செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது கணவர் முனிராஜ். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 5 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் முனிராஜ், கடந்த 7 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தான் வீடு திரும்பினார். நவ.8ஆம் தேதி அதிகாலை வீட்டுக் கதவை தட்டிய போலீஸார் தூங்கிக் கொண்டிருந்த முனிராஜை இழுத்துச் சென்றனராம்.

    இது குறித்து முனியம்மாள் கூறியது:

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் நடந்த தேதியில் எனது கணவர் வேலைக்குச் சென்றிருந்தார். பிற்பகலுக்கு மேல்தான் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஆனால், எனது கணவர் வேலை முடிந்து இரவுதான் வீட்டுக்கு திரும்பி வந்தார். தற்கொலை செய்த நாகராஜ், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, இந்தக் கிராமத்து ஆண்கள் அனைவரையும் (பள்ளிச் சிறார்களையும்) கைது செய்தனர்.

    எனது கணவர் இல்லாமல் கைக் குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறேன். அப்பாவை பார்க்காத ஏக்கத்தில் குழந்தைக்கு ஜுரம் ஏற்பட்டுள்ளது. மருந்து வாங்கவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஆளில்லாமல் கை வைத்தியம் செய்து வருகிறேன் என்றார் அவர்.

    இதேபோல, இந்தக் கிராமம் மட்டுமல்லாது, வாணியம்பாடியான் கொட்டாய், கோணங்கிநாயக்கனஹள்ளி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குக்

    கிராமங்களிலும் கணவர், மகன்களைக் கைது செய்துள்ளதால், பெண்கள் அனைவரும் அச்சத்துடனே உள்ளனர்.

    இந்தப் பெண்கள் அனைவரும் வியாழக்கிழமை ஆறுதல் கூற வந்த பாமக தலைவர் மற்றும் கட்சியினரது காலைப் பிடித்து தங்களது வீட்டு ஆண்களை சிறையில் இருந்து மீட்குமாறு கதறி அழுதனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai