Enable Javscript for better performance
செல்லன்கொட்டாய் கிராமத்துக்கு மாற்று வழியில் சென்ற பாமகவினர்- Dinamani

சுடச்சுட

    

    செல்லன்கொட்டாய் கிராமத்துக்கு மாற்று வழியில் சென்ற பாமகவினர்

    By dn  |   Published on : 23rd November 2012 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்முறை பாதித்த கிராமங்களுக்குச் செல்ல பாமக தலைவருக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டனர்.

    இருப்பினும், தற்கொலை செய்து கொண்ட நாகராஜின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற செல்லன்கொட்டாய் கிராமத்துக்கு மட்டும் செல்ல மாற்று வழியில் அனுமதியளித்தனர்.

    தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் 10-ஆவது கி.மீ. தொலைவில் உள்ளது நாயக்கன்கொட்டாய். இங்குள்ள நத்தம் காலனியில்தான் கடந்த 7 ஆம் தேதி வன்முறை நடைபெற்று, 150-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர், கொண்டம்பட்டியிலும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

    இந்தச் சம்பவத்துக்கு பாமக தரப்பே காரணம் என பாதிக்கப்பட்டவர்களும், பல்வேறு கட்சியினரும் கூறி வந்ததால், இந்தக் கிராமங்களுக்கு வர பாமக, வன்னியர் சங்கத் தலைவர்களுக்கு போலீஸார் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்கொலை செய்த நாகராஜின் குடும்பத்தைச் சந்திக்க மட்டும் பாமக-வினருக்கு வியாழக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. பாமக தலைவர் கோ.க. மணி தலைமையில் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சியினர் பலரும் 30-க்கும் மேற்பட்ட கார்கள், 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தருமபுரியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

    திருப்பத்தூர் சாலையில் சென்றால் நத்தம் காலனியை கடந்துதான் செல்லன்கொட்டாய் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்த வழியாக அனுமதித்தால் அசம்பாவிதம் ஏற்படலாம்

    என்று முன்னெச்சரிக்கையாக மாற்று வழியில் செல்ல போலீஸார் அனுமதியளித்தனர்.

    தருமபுரி - கிருஷ்ணகிரி புறவழிச் சாலையில் சென்று, மாரவாடியை அடுத்துள்ள வலதுபுற திருப்பத்தில் சென்று கோணங்கிநாயக்கனஹள்ளி ஊராட்சி வழியாக செல்லன்கொட்டாய்க்கு செல்லும் வகையில் போலீஸாரே பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    செல்லன்கொட்டாய் கிராமம் மட்டுமல்லாது சுற்றுப் பகுதியைச்சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நத்தம் காலனியை கடந்துதான் பேருந்துகளில் பயணிக்க நடந்து செல்ல வேண்டியுள்ளது. மோதல் காரணமாக பெண்கள் யாரும் வெளியே செல்லாமல் அவரவர் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர்.

    இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், தடையின்றி சென்றுவரவும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai