Enable Javscript for better performance
காதல் திருமணம் செய்த பெண் விரும்பும் இடத்துக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    காதல் திருமணம் செய்த பெண் விரும்பும் இடத்துக்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி

    By dn  |   Published on : 24th November 2012 12:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவத்துக்கு காதல் திருமணமே காரணம் எனக் கூறப்படும் சூழலில், திருமணம் செய்து கொண்ட திவ்யா (20) அவர் விரும்பும் இடத்துக்குச் செல்ல தருமபுரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    தருமபுரியை அடுத்துள்ள செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகள் திவ்யாவும், நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசனும் காதல் திருமணம் செய்ததாகக் கூறி, சேலம் டிஐஜி சஞ்சய்குமாரிடம் கடந்த மாதம் 15-ஆம் தேதி தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து, உரிய பாதுகாப்பு வழங்குமாறு தருமபுரி மாவட்ட போலீஸாருக்கு டிஐஜி உத்தரவிட்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில், இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெண்ணின் தந்தை நாகராஜ் கடந்த 7-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதால், வன்முறை வெடித்து 3 கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    சம்பவத்துக்குக் காரணம் காதல் திருமணமே எனக் கூறப்பட்டாலும், திருமணம் செய்தனரா, இருவருக்கும் சட்டப்பூர்வ திருமண வயது உள்ளதா என்பதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

    இந்த நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி, வழக்குரைஞர்களுடன் வந்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். தனது மகள் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அவரை திருமண வயது வராத இளைஞருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, திவ்யாவை தருமபுரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது, நீதிபதி கே. ஜோதி முன் ஆஜரான திவ்யா கூறியது:

    எனக்கு 8.10.2012-இல் திருமணம் நடைபெற்றது. நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை. நான் எனது மாமனாரான இளங்கோ, மாமியார் கிருஷ்ணவேணி, நாத்தனார் அமுதா ஆகியோருடன் செல்ல விரும்புகிறேன். அவர்கள் பெங்களூரில் உள்ளனர். எனது அம்மாவுடன் செல்ல விருப்பமில்லை என்றார்.

    அப்போது, குறுக்கிட்ட திவ்யாவின் தாய் தேன்மொழி தரப்பு வழக்குரைஞர்கள், திவ்யா மீது வழக்குகள் உள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், 44 சிஆர்பிசி சட்டப் பிரிவின்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ஜோதி பிறப்பித்த உத்தரவு:

    கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 294/2012 என்ற வழக்கில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலைக்கு திவ்யா காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், இளவரசன், அவரது தந்தை, தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், திவ்யா பிறந்த தேதி 5.12.1992. இதன்படி அவர் மேஜர். எனவே, அவர் விரும்பும் இடத்துக்குச் செல்லலாம். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய அதிகாரி, திவ்யாவைக் கைது செய்வதற்காக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. குற்றம் சுமத்தியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, திவ்யா விரும்பும் இடத்துக்குச் செல்லலாம் என்றார் நீதிபதி.

    மேலும், 44 சிஆர்பிசி சட்டப் பிரிவின்படி வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். போதிய முகாந்திரம் இல்லாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து திவ்யாவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai