Enable Javscript for better performance
தருமபுரி நீதிமன்றத்தில் 4 மணி நேர பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு நாளுக்கு இணையாக தருமபுரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ.23) பரபரப்பாகக் காணப்பட்டது.

    காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஒவ்வொரு நொடியும் பரபரப்புடனே கழிந்தது.

    வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 29-இல் வழங்கப்பட்டது. அப்போது, தருமபுரி நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினர், போலீஸார், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த வழக்குக்கு அடுத்தபடியாக தருமபுரி நீதிமன்றத்தில் அதிகளவு வெள்ளிக்கிழமை கூட்டம், நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது காணப்பட்டது.

    வன்முறைச் சம்பவத்துக்கு காரணமாகக் கூறப்படும் காதல் திருமணம் செய்த பெண் திவ்யா இரண்டாம் நாளாக நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி இந்தக் கூட்டம் காணப்பட்டது. காலை 10 மணிக்கே திவ்யாவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர்.

    தருமபுரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. ஆனால், மாவட்ட உரிமையியல் நீதிபதியான கே.ஜோதி, இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பை கவனித்து வருவதால், மாவட்ட உரிமையையில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கு விசாரண நடைபெற்றது.

    முதல் வழக்காக திவ்யா ஆஜரானதை எடுத்துக் கொண்டு அவரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். ஆனால், எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் சூழ்ந்து கொண்டு நீதிபதியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். திவ்யாவைக் கைது செய்ய உத்தரவிடவும் வலியுறுத்தினர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்கவும் கோரினர். கைது செய்வதற்காக மனுவையும் தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து, நீதிமன்ற நடவடிக்கையை ஒத்துவைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார் நீதிபதி. சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்த நீதிபதி, இதர வழக்குகள் மீதான மனுவை விசாரித்து அதற்கான அடுத்தக்கட்ட விசாரணை தேதியை அறிவித்தார்.

    பின்னர், மீண்டும் வெளியே சென்று தலைமைக் குற்றவியல் நீதிபதி, மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் திவ்யா வழக்குத் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பிற்பகல் 1.25 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி, வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதன் மீதான உத்தரவை பிற்பகல் 2 மணிக்கு தெரிவிப்பதாகவும் அறிவித்துவிட்டு கலைந்து சென்றார்.

    மீண்டும் பிற்பகல் 2.20 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி, வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், திவ்யாவை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர் விரும்பும் இடத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறும் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai