தருமபுரியில் பள்ளி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி காந்திநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளராக உள்ளார். இவரது மகள் அஸ்வினி (17) . இவர் தருமபுரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவி அஸ்வினி புதன்கிழமை இரவு வீட்டில் வழக்கம்போல உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்குச் சென்றார். வியாழக்கிழமை அதிகாலை அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் காரணமா?: உயிரிழந்த மாணவி அஸ்வினி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தார். இதையடுத்து, பிளஸ் 1 வகுப்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் மன அழுத்தத்தில் மாணவி இருந்தாராம். மேலும், பள்ளி நிர்வாகம் பொதுத் தேர்வில் சிறப்பிடம் வகிப்பதற்காக மாணவ, மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி அஸ்வினியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: அஸ்வினியின் மரணம் குறித்து பிரிவு 174-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை இறுதியில் மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தொடர் சம்பவம்: இதே தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவி ஜோதிப்பிரியா பள்ளி விடுதியில் தன்னைத் துன்புறுத்தியதாக செவ்வாய்க்கிழமை அதிக அளவு மாத்திரைகள் உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, அவர் தற்போது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தருமபுரி நகர் போலீஸார், மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி அஸ்வினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.