Enable Javscript for better performance
போலீஸ் நடவடிக்கையை கைவிடக் கோரி ஆட்சியர், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் நடவடிக்கையை கைவிடக் கோரி ஆட்சியர், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் முறையீடு

    By தருமபுரி,  |   Published on : 01st July 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியில் திங்கள்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீஸார் மேற்கொள்ளும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து முறையிட்டனர்.

    நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தின் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள ரயில் பாதையில் இளவரசன் சடலமாகக் கிடந்தார்.

    இளவரசனின் நினைவு தினத்தையொட்டி, வருகிற ஜூலை 4-ஆம் தேதி பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கடைப்பிடிக்க ஒரு சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரின.

    இதனால், தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தருமபுரி வருவாய் வட்டத்தில் இரு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நத்தம்காலனியில் போலீஸார் கடந்த சனிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஆகியவை பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை நத்தம்காலனிக்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சென்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் மகனும், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவருமான திருப்பதியை (26) போலீஸார் கைது செய்தனர்.

    காவல் துறை நடவடிக்கையை கைவிடக் கோரி முறையீடு: நத்தம்காலனியில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், போலீஸார் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நத்தம்காலனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் பேச்சு நடத்தினர். இதில், தேடுதல் வேட்டை என்ற பெயரில் தங்களது பகுதிக்கு ஏராளமான போலீஸார் வந்து அப்பாவிகளைக் கைது செய்கின்றனர். இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    குற்றச் செயல்களில் தொடர்பில்லாதவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்தார்.

    இதையடுத்து, இதே கோரிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்கிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் கூறியது:

    காவல் துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், நத்தம்காலனியில் ஆயுதங்கள் வைத்திருந்த 7 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சிலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாவர். குற்றச் செயல்களில் தொடர்பில்லாத யார் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்காது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai