Enable Javscript for better performance
3 சாலை விபத்துகளில் 5 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த 3 சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

    சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (60). ஜவுளி வியாபாரி. இவரது நண்பர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த வெங்கடசாமி (70). இருவரும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், ஹைதராபாதுக்கு ஜவுளி கொள்முதல் செய்ய வேனில் சென்றனர். இந்த வேனை சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகமூர்த்தி (28) ஓட்டிச் சென்றார்.

    ஆந்திர மாநிலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வேன் மூலம் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திங்கள்கிழமை அதிகாலை தருமபுரி நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென வேன் டயரில் பழுது ஏற்பட்டது. இதில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சண்முகசுந்தரம், வெங்கடசாமி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஓட்டுநர் நாகமூர்த்தி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனங்கள் மோதி இருவர் சாவு: தருமபுரி அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் பூ வியாபாரி மாதேஷ். இவரது மகன் சக்தி (19). தருமபுரி 24-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுருளிராஜன் மகன் கோகுல் (18). தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்களது நண்பர் மூர்த்தி.

    இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்குச் சென்றனர். பின்னர், மீண்டும் மாலையில் வீடு திரும்பினர். அப்போது, பென்னாகரம்- தருமபுரி சாலையில் ஆட்டுக்காரன்பட்டி அருகே வந்த போது, எதிரே அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (25) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சக்தி உயிரிழந்தார்.

    தீவிர சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோகுல், அங்கு உயிரிழந்தார்.

    மாதேஷ், மூர்த்தி ஆகியோருக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாரி- இரு சக்கர வாகனம் மோதல்: கொல்கத்தாவிலிருந்து இரும்புக் குழாய்களை ஏற்றிய லாரி கேரளம் மாநிலம், கொச்சிக்கு தருமபுரி வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரையைச் சேர்ந்த ஷாஜஹான் ஓட்டினார். அவருடன் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் ராமர் இருந்தார்.

    இந்த லாரி திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையை அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தண்டுகாரன்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சிவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், லாரி நிற்காமல் சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில், லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்பட தொழிலாளர்கள் புகழேந்தி, பெருமாள், மூர்த்தி, சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் புனித்குமார், ஜீவா ஆகியோர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai