Enable Javscript for better performance
இந்து மலையாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சித்தேரி ஊராட்சியில் மருத்துவம், குடிநீர், மின்சார வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு இந்து மலையாளி (எஸ்.டி) விவசாய முன்னேற்ற சமூக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர் வட்டாட்சியர் அலுவலம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் செயலர் பி.ராமசாமி தலைமை வகித்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் அரசத்தம், கலசபாடி, கோட்டக்காடு, கருக்கம்பட்டி உள்பட 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் இன்னும் முழுமையான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், மின்சார வசதிகள் செய்யப்படவில்லை.

    சித்தேரி ஊராட்சிக்கு வரும் நிதிகள் முறையாக செலவு செய்யப்படுவதில்லை. மலைக் கிராமங்கள் என்பதால், இந்தப் பகுதிக்கு அரசு உயர் அதிகாரிகள் வருவதில்லை. இதனால், இங்குள்ள மக்கள் கடந்த 50 ஆண்டுகாலமாக மருத்துவம், கல்வி, சாலை வசதிக்காக ஏங்கி வருகின்றனர்.

    சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் சுய தொழில்கள், வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    தருமபுரி மாவட்டம், வத்தல்மலையைச் சுற்றுத்தலாமாக மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தத் தலத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வேலாயுதம், ஒன்றியத் தலைவர் சி.ராமன், செயலர் ஏ.பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    போலீஸாரை கண்டித்து சாலை மறியல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு இந்து மலையாளி விவசாய முன்னேற்ற சமூக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி இணைப்புகளை போலீஸார் துண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மலையாளி சங்கத்தினர், அரூர் - தருமபுரி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, போலீஸாரை கண்டித்து, அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரையிலும் சேலம் பிரதான சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதையடுத்து, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அரூர் - தருமபுரி, சேலம் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai