Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் கர்ப்பிணிகள் அவதிஆ.சமுத்திரராஜன்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் கர்ப்பிணிகள் அவதிஆ.சமுத்திரராஜன்

    By தருமபுரி  |   Published on : 04th July 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட மருத்துவத் துறையின் அலட்சியம் காரணமாக, ஓராண்டாக வட்ட மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பிரசவத்துக்கு வரும் தாய்மார்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய வட்ட மருத்துவமனைகளில், பென்னாகரம் மாவட்டத் தலைமை மருத்துவமனையாகவும், அரூர் தாய்- சேய் நல சிறப்பு சிகிச்சை மையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த 4 மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் தாய்மார்களுக்கு பிரசவ சிகிச்சை அளிக்க 9 மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பாலக்கோடு, அரூரில் மட்டும் தலா ஒரு மகப்பேறு மருத்துவர் பணியில் உள்ளனர்.

    இந்த இரு மருத்துவர்களால் மருத்துவமனைகளுக்கு பிரசவத்துக்கு வரும் தாய்மார்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பது என்பது இயலாத விஷயமாகும். இதனால், பிரசவத்துக்கு வரும் தாய்மார்களில் ரத்தப் போக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும். ஆனால், மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், பிரசவத்துக்கு வரும் தாய்மார்களை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

    இதனால், சித்தேரி மலைப் பகுதியில் இருந்து பிரசவத்துக்கு வருவோர் தருமபுரிக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால், பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு சேர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, பல தாய்மார்களுக்கு குறித்த காலத்தில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, அதிகளவில் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதால் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, கர்ப்பிணித் தாய்மார்கள் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தில் அரசால் அளிக்கப்படும் உதவித் தொகையான 12,000 ரூபாயைப் பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதுதவிர, அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தில் அளிக்கப்படும் ரூ.700 ஊக்கத்தொகையும் கிடைக்காமல் போகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்படும் சலுகையைப் பெற முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

    இதன்மூலம், தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் இல்லை என்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

    இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் குணசுந்தரி கூறியது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்ட மருத்துவமனைகளில் நீண்டகாலமாக மகப்பேறு மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளது குறித்து இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai