Enable Javscript for better performance
தருமபுரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    By தருமபுரி  |   Published on : 04th July 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், நத்தம்காலனியை சேர்ந்த இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருவதையொட்டி பதற்றத்தைத் தவிர்க்க மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியை சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தின் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள ரயில் பாதையில் இளவரசன் சடலமாகக் கிடந்தார்.

    இந்த நிலையில், ஜூலை 4-ஆம் தேதி இளவரசனின் நினைவு தினத்தைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரின.

    இதனால், மீண்டும் இரு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் வருகிற 10-ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தடையை மீறி, தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியில் இளவரசனின்

    நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக அந்தக் கட்சியின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், நத்தம்காலனியில் ஆயுதப் பயிற்சி எடுத்ததாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாகவும் 7 பேரை தருமபுரி மாவட்டப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தடை உத்தரவை மீறி நினைவு நாள் கடைப்பிடிக்க உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் அறிவித்துள்ளதால் மாவட்டத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்டப் போலீஸார், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் என மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நாயக்கன்கொட்டாய், நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி, செல்லான்கொட்டாய் பகுதியில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்ட எல்லைகளில் தாற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைத்து, போலீஸார் தீவிரமாக தருமபுரி மாவட்டத்திற்குள் வருவோரை கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai