Enable Javscript for better performance
இளவரசன் நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்ற உத்தரவுப்படி, தருமபுரி மாவட்டம், நத்தம்காலனியில் இளவரசனின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அவரது நினைவிடத்தில் பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம்காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தின் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது.

    இந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ஆம் தேதி தருமபுரி அரசுக் கலைக் கல்லூரி அருகே ரயில் பாதையில் இளவரசன் சடலமாகக் கிடந்தார்.

    இந்த நிலையில், ஜூலை 4ஆம் தேதி இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிய அனுமதி நிராகரிக்கப்பட்டதுடன், மாவட்டம் முழுவதிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து, இளவரசனின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை தி.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நத்தம்காலனியை சேர்ந்த இளவரசனின் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி அளித்தது.

    இதையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இளவரசனின் பெற்றோர் இளங்கோவன், கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு: நத்தம்காலனி, செல்லான்கொட்டாய், சுற்றுப்புறப் பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அதேபோல, திருப்பத்தூர் சாலையில் செங்கல்மேடு என்னுமிடத்தில் தாற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டன.

    நத்தம்காலனி நுழைவுப் பகுதி, இளவரசன் சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு, கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்களை மட்டும் அஞ்சலி செலுத்த உள்ளே அனுமதித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai