Enable Javscript for better performance
கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம்விட எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் "அம்மா' உணவகம் கட்டுவதற்காக ஒப்பந்தம்விட நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மறு ஒப்பந்தம் கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    தருமபுரி நகர்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் ஜெ.சுமதி தலைமை வகித்தார். ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், தருமபுரியில் நகராட்சி சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகர் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் "அம்மா' உணவகம் அமைக்க ரூ. 69.60 லட்சம் மதிப்பில் கட்டடங்கள் கட்டப்படப்பட உள்ளதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சார்பில் கட்டப்பட உள்ள "அம்மா' உணவகங்களின் கட்டுமானப் பணிக்கு ரகசியமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில், ஒருவர் மட்டும் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தற்போது ஏலம் விட முடிவுசெய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

    மேலும், இரண்டு உணவகங்கள் கட்ட மறு ஒப்பந்தம் கோர வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.

    மேலும், நகராட்சிப் பகுகளில் குடியிருப்புகளுக்குகான குடிநீர் கட்டணத்தை மாதாந்திர கட்டணம் ரூ.150, முன் வைப்புத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்துவது என கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மாதாந்திரக் குடிநீர் கட்டணம் ரூ.100 ஆகவும், முன் வைப்புத் தொகை ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து கூட்டத்தில், இந்த இரண்டு தீர்மானங்கள் தவிர மற்ற 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இது குறித்து, நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி கூறியது: தருமபுரியில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகர்ப் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் "அம்மா' உணவகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் ஒரு டெண்டர் மட்டுமே வரப்பெற்றது. இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மறு ஒப்பந்தம் கோர முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோல, குடியிருப்புகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 ஆகவும், முன் வைப்புத் தொகை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai