Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களே சிறந்தவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களே சிறந்தவர்கள்

    By ஊத்தங்கரை  |   Published on : 06th July 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பள்ளிகளில் படித்து முதல் மதிப்பெண் பெறுபவர்களைவிட அரசுப் பள்ளிகளில் படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களே சிறந்தவர்கள் என்று, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி வரவேற்றார்.

    இதில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் மேலும் பேசியது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக 21 சதம் நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார்.

    சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1963 ஆம் ஆண்டு 262 மாணவர்களுடன் ஓலை கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது. உயர் நிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

    பள்ளியில் தற்போது 1161 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தில் மொத்தம் 5500 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 92 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    கல்விக்காக 14 வகையான உபகரணங்களை முதல்வர் வழங்கியுள்ளார். இதையடுத்து, மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நன்கு படித்து தங்களின் தனித் திறனை வளர்த்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.தென்னரசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.அர்ச்சுனன், அனைவருக்கும் கல்வி இயக்கக முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார், மாவட்டக் கல்வி அலுவலர் எம்.சசிகலாவதி, பள்ளித் தலைமை ஆசிரியர் கு.நாகம்மாள், வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகரன், வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் க.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai