Enable Javscript for better performance
கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை வைத்து ரூ.33 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை வைத்து ரூ.33 லட்சம் மோசடி

    By அரூர்  |   Published on : 06th July 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை வைத்து ரூ.33.57 லட்சம் மோசடி செய்ததாக அதன் முன்னாள் செயலர் உள்பட இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    அரூர் வட்டத்தில் பொன்னேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தங்க நகைக் கடன்கள் அளிக்கப்படுகிறது. பொன்னேரி, வேப்பம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளைச் சேந்த விவசாயிகள் பலர் நகைக் கடன்களை பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பெயரில், போலியான தங்க நகைகளை அடகு வைத்து கூட்டுறவுச் சங்கப் பணத்தைக் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

    3.9.2012-இல் இருந்து இந்த முறைகேடுகளில் கூட்டுறவுச் சங்கச் செயலர், காசாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோருக்கு தொடர்பிருப்பதும், போலி நகைகளை வைத்து பணம் மோசடி செய்ததும் கடந்த ஓராண்டுக்கு முன்பு தெரிய வந்தது.

    கூட்டுறவுச் சங்கத்தின் அப்போதைய செயலரான எச்.தொட்டம்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி ஜெயந்தி (46), காசாளர் பொன்னேரி கூச்சனூரைச் சேர்ந்த நரசிம்மன் மகன் முருகன் (53), நகை மதிப்பீட்டாளர் எச்.புதுப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் சாமி (எ) சுரேஷ் ஆகியோர் ரூ.33 லட்சத்து 57 ஆயிரத்து 230-ஐ கையாடல் செய்தது தெரிய வந்தது.

    உடனடியாக அவர்கள் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், கையாடல் செய்த பணம் முழுவதும் வசூல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த நிலையில், இந்த மோசடி குறித்து தருமபுரி மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அர்த்தனாரீஸ்வரன் அண்மையில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், பணம் மோசடியில் ஈடுபட்ட ஜெயந்தி மூவர் மீதும் 9-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் செயலர் ஜெயந்தி, முன்னாள் காசாளர் என்.முருகன் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    தலைமறைவான நகை மதிப்பீட்டாளார் சாமி (எ) சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai