தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜிநாமா
By தருமபுரி, | Published on : 06th July 2014 03:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பினார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, கட்சித் தலைமை உத்தரவின் பேரில் அவர் ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவராக டி.ஆர்.அன்பழகன் செயல்பட்டு வந்தார். அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளராக இருந்த இவர், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை பெற்றுத் தந்தது உள்ளிட்ட புகாரைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் கட்சிப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி அதிமுக வேட்பாளர் பி.எஸ்.மோகன் தோல்வியைத் தழுவினார். இதற்கு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் மறைமுகமாக பாமகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதாக அதிமுக தலைமைக்கு புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன் நீக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சித் தலைமை அவருக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு டி.ஆர்.அன்பழகன் சனிக்கிழமை அனுப்பினார். அவரது ராஜிநாமா கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் கேட்ட போது, மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர்.அன்பழகன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜிநாமா கடிதம் குறித்து சட்ட விதிகளுக்கு உள்பட்டு முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
டி.ஆர்.அன்பழகனைத் தொடர்ந்து மேலும் சிலரையும் ராஜிநாமா செய்ய கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓரிரு நாள்களில் அவர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்யக்கூடும் எனத் தெரிகிறது.