Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் 430 மனுக்கள் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் வழங்கப்பட்டன.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், பொச்சரம்பட்டி கிராமத்தில் முழு நேர நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கடையில் கோடரம்பட்டி கிராம மக்கள் இதுநாள் வரை குடிமைப் பொருள்களை பெற்று வருகின்றனர்.

    கோடரம்பட்டி பொதுமக்கள் நியாய விலைக் கடைக்குப் பொருள்களைப் பெற சுமார் 5 கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்தக் கிராம மக்களின் நலன் கருதி கோடரம்பட்டியில் பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் ஏராளமானோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    விடுதி வசதி கோரி மனு: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட நாகனம்பட்டி, பவளந்தூர், சக்கிலிநத்தம், திகிலோடு உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகள், பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாங்கள் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வர சுமார் மூன்று பேருந்துகள் மூலம் பயணிக்க வேண்டியுள்ளது.

    எனவே, தங்களுக்கு பாப்பாரப்பட்டியில் உள்ள விடுதியில் தங்கிப் பயில அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவிகள் மனு அளித்தனர்.

    மாணவர் இல்லத்தில் அதிகாரிகள் தொல்லை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கோட்டூரில் உள்ள எய்ம் பார் சேவா மாணவ, மாணவிகள் இல்லத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். இவர்கள் அருகிலுள்ள பாலக்கோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். சேவை நோக்கத்துடன் அரசு விதிகளுக்கு உள்பட்டு இல்லத்தை நடத்தி வரும் எங்களிடம், சில அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மிகுந்த தொல்லை அளித்து வருகின்றனர். இதனால், இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே, அதிகாரிகளின் தேவையற்ற கெடுபிடி, தொல்லைகளை கட்டுப்படுத்தி உரிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    மேலும், வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் மனுக்களை அளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai