Enable Javscript for better performance
தருமபுரியில் \\\"அம்மா\\\' உணவகம்: கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம்விட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் "அம்மா' உணவகம்: கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம்விட முடிவு

    By தருமபுரி,  |   Published on : 08th July 2014 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் "அம்மா' உணவகம் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம் விட முடிவு செய்யப்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி நகர்மன்ற சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நகராட்சிப் பள்ளியில் உள்ள நகர்மன்ற அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமை வகித்தார். ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி பேசியது:

    தருமபுரி நகராட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகர்ப் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களில் பொதுமக்களுக்கு மலிவான விலையில் உணவு விற்பனை செய்ய "அம்மா' உணவகம் திறக்கப்பட உள்ளது.

    இந்த உணகங்களைக் கட்டுவதற்கு ஒரே ஒரு ஒப்பந்தம் வரப்பெற்றுள்ளதாகக் கூறி, இந்தத் தீர்மானம் ரத்து செய்ய வேண்டும் எனவும், மறு ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும் எனவும் கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மறு ஒப்பந்தம் விட காலதாமதமாகும். தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சிகளில் "அம்மா' உணவகம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தருமபுரியிலும் குறித்த காலத்தில் உணவகம் தொடங்க வேண்டியுள்ளது. எனவே, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, ஏற்கெனவே வரப்பெற்றுள்ள ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

    கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13-ஆவது வார்டு உறுப்பினர் மோகன் எதிர்ப்புத் தெரிவித்து பேசியது:

    தருமபுரியில் "அம்மா' உணவகம் கட்டுவதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி மறு ஒப்பந்தம் விட வேண்டும் என்றார்.

    இதற்கு, பதிலளித்த நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி, தருமபுரி நகர்மன்றத்தில் மொத்தமுள்ள 33 வார்டு உறுப்பினர்களில் 17 பேர் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, கூட்டம் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai